search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருமுட்டை விற்பனை"

    • பெண் புரோக்கர் மாலதியிடம் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் விஜயா ஆகியோர் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
    • பண ஆசை காட்டி மேலும் பல பெண்களை அழைத்து சென்று கருமுட்டை விற்பனை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த சம்பவம் தொடர்பாக அவரது தாய் வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, சிறுமியின் பிறப்பு, ஆதார் சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. இவர்கள் கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்தனர். அவர்கள் ஆர்.என்.புதூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் சிறுமியிடம் கருமுட்டை எடுத்த ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பான ஆவணங்களையும் கேட்டு பெற்றனர். அதோடு இல்லாமல் கடந்த 4 ஆண்டுகளில் ஆஸ்பத்திரிகளில் கருமுட்டை தானம் கொடுத்தவர்கள் பட்டியலையும் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

    சிறுமியிடம் நடத்திய விசாரணையில் திருப்பதி, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கருமுட்டை எடுக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் பெருந்துறையில் உள்ள ஆஸ்பத்திரி மூலம் திருவனந்தபுரத்துக்கும், ஓசூரில் உள்ள ஆஸ்பத்திரி மூலம் திருப்பதிக்கும் சிறுமியை அழைத்து சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து மருத்துவ குழுவினர் 2 ஆஸ்பத்திரிக்கும் ஆவணங்களுடன் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.

    அதன்படி நேற்று திருப்பதி, திருவனந்தபுரத்தை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி மேலாளர்கள், டாக்டர்கள், நர்சுகள் சென்னை மருத்துவக்குழு முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    மேலும் ஆவணங்களையும் கேட்டு பெற்றனர். மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை இரவு 8 மணி வரை நடைபெற்றது. பின்னர் மருத்துவ குழுவினர் தேவைப்படும்போது விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

    மருத்துவக்குழு ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் நிலையில் ஈரோடு ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையில் போலீசாரும் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் நேற்று 2-வது முறையாக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி முன்னிலையில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதற்கிடையே 15 நாள் போலீஸ் காவல் முடிந்து சிறுமியின் தாய் உள்பட 4 பேரும் ஈரோடு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். சூரம்பட்டி போலீசார் பெண் புரோக்கர் மாலதியை 5 நாள் காவலில் எடுக்க கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் 1 நாள் மட்டுமே விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதையடுத்து சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, சான்றிதழ் போலியாக தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 3 பேரை மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றனர். பெண் புரோக்கர் மாலதியை சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    பெண் புரோக்கர் மாலதியிடம் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் விஜயா ஆகியோர் விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் மாலதியின் 2 வங்கி கணக்குகளின் பண பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தினர்.

    பொதுவாகவே ஒருவர் கருமுட்டை கொடுத்தால் மீண்டும் 6 மாதம் கழித்துதான் கருமுட்டை கொடுக்க முடியும். அப்படி இருக்கையில் மாலதியின் வங்கி கணக்கில் 6 மாத இடைவெளியில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே அவர் பண ஆசை காட்டி மேலும் பல பெண்களை அழைத்து சென்று கருமுட்டை விற்பனை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைகள் அனைத்தும் போலீசார் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

    விசாரணை முடிந்ததும் மாலதி மீண்டும் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

    • கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை.
    • சட்டவிரோத கருமுட்டை விற்பனை குறித்து தெரிய வந்தால் பொதுமக்கள் போலீசாரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை போலி ஆதார் கார்டு மூலம் பெற்றோரே, பெண் புரோக்கர் மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை வளர்ப்பு தந்தையே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் இதற்கு உடந்தையாக அவரது தாய் இருந்ததும் தெரியவந்தது.

    மேலும், சிறுமியின் கருமுட்டையை ஈரோடு, பெருந்துறை மட்டும் அல்லாது சேலம், ஓசூர், ஆந்திரா மாநிலம் திருப்பதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் இயங்கும் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சிறுமியின் தாய், வளா்ப்பு தந்தை, புரோக்கராக செயல்பட்ட மாலதி, போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த டிரைவர் ஜான் உட்பட 4 பேர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக தமிழக மருத்துவ பணிகள் இயக்குனரகத்தை சேர்ந்த உயர்மட்ட மருத்துவ குழுவினர் ஈரோடு வந்து, பாதிக்கப்பட்ட சிறுமியிடமும், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளிடமும் நேரடி விசாரணையாக நடத்தினர்.

    இதற்கிடையில் மாவட்ட காவல் துறை சார்பில், ஈரோடு ஏ.டி.எஸ்பி. கனகேஸ்வரி தலைமையில் தனி விசாரணை நடந்து வருகிறது. ஈரோடு, பெருந்துறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    இதில் பாதிக்கப்பட்ட சிறுமியை தவிர, போலி ஆதார் மூலம் வேறு ஏதேனும் சிறுமிகளிடம் சட்ட விரோதமாக கருமுட்டை பெறப்பட்டதா? என தனியார் மருத்துவமனைகளில் கருமுட்டை பெற்றவர்கள் பட்டியல், அவர்களது ஆதார் எண், முகவரி, அம்முட்டையால் கருவுற்றோர் விபரம், அவர்களது முகவரி போன்றவற்றை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து, சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக சேலம், ஓசூர், கேரளா மாநிலம் திருவனந்தபுரம், ஆந்திரா மாநிலம் திருப்பதி ஆகிய இடங்களில் இயங்கும் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகிகள், மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பினர்.

    இந்நிலையில், ஓசூர், திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் என 6 பேர் நேற்று சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களை, ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினார்.

    சிறுமியிடம் கருமுட்டை எடுத்தபோது, சிறுமி தரப்பில் கொடுத்த போலி ஆதார் அட்டை நகலினை ஆய்வு செய்தனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் இதுவரை எத்தனை முறை கருமுட்டை தானம் செய்யப்பட்டது.

    எந்தெந்த நாட்களில் செய்யப்பட்டது என போலீசார் விசாரணை நடத்தினர். கருமுட்டை தானம் செய்யப்பட்டபோது அரசு அறிவித்துள்ள நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா?. என்பது குறித்து டாக்டர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    எந்த ஆவணங்கள் அடிப்படையில் சிறுமிக்கு கருமுட்டை எடுக்கப்பட்டது என்றும் டாக்டர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு தகவல் கிடைத்துள்ளன. பின்னர் விசாரணையை முடித்துக்கொண்டு மாலை மருத்துவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    இதுகுறித்து ஈரோட்டில் டி.ஐ.ஜி. முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து தாய், வளர்ப்பு தந்தை, பெண் புராக்கர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருச்சியில் உள்ள 5 தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பி உள்ளோம். ஈரோடு, பெருந்துறை தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நிறைவடைந்துள்ளது. மருத்துவ பணிகள் இயக்குனரக டாக்டர் வல்லுனர் குழுவினர் இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவ ரீதியாக விசாரிக்கின்றனர்.

    தமிழக அரசு ஒரு மருத்துவ குழுவை அமைத்துள்ளது. முறைகேடு நடந்ததாக மருத்துவ குழுக்கள் அறிக்கை சமர்பிக்கும் பட்சத்தில் அதனடிப்படையில் போலீசார் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய முடியும். தவறு நடந்திருந்தால் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டை விவகாரத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. சட்டவிரோத கருமுட்டை விற்பனை குறித்து தெரிய வந்தால் பொதுமக்கள் போலீசாரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வழக்கில் போலீஸ் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று மாலை அல்லது நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மருத்துவர்கள், நிர்வாக இயக்குனர்கள் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து சிறுமிக்கு கருமுட்டை எடுத்தது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க உள்ளனர்.

    இதனால் இந்த வழக்கு விசாரணை மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    • கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள், ஊழியர்களிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
    • தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் ஏற்கனவே ஈரோட்டை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள், ஊழியர்களிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் சேலம், ஓசூர், ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய தனியார் ஆஸ்பத்திரிக்கும் விசாரணைக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியைச் சேர்ந்த நிர்வாக இயக்குனர்கள், டாக்டர்கள் ஒரு காரிலும், ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த தனியார் மருத்துவமனையை சேர்ந்த நிர்வாகிகள், டாக்டர்கள் ஒரு காரிலும் வந்தனர்.

    பின்னர் அவர்கள் நேராக போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்திற்கு உள்ளே சென்றனர். அவர்கள் தங்களுடன் முக்கிய ஆவணங்களையும் எடுத்து சென்றனர். அவர்கள் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி முன்னிலையில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • ஈரோடு விவகாரத்தின் எதிரொலியாக இச்சட்டம் தமிழ்நாட்டில் உடனடியாக அமலுக்கு வரும் என தமிழக அரசு 7-ந் தேதி அறிவித்தது.
    • தற்போது அமலுக்கு வந்திருக்கும் சட்டத்தின்படி, 23 முதல் 35 வயதுக்குள்ளான பெண்ணிடம் மட்டுமே கருமுட்டைகள் எடுக்க முடியும்.

    சென்னை:

    ஈரோடு சினைமுட்டை விவகாரம் எதிரொலியாக தமிழ்நாட்டில் Assisted Reproductive Technology Regulation 2021 சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இச்சட்டம் மத்திய அரசால் கடந்த ஆண்டு இயற்றப்பட்டது. ஆனால் இதுவரை அதை அமல்படுத்துவதற்கான விதிகள் மாநிலத்தில் அறிவிக்கப்படவில்லை.

    தற்போது ஈரோடு விவகாரத்தின் எதிரொலியாக இச்சட்டம் தமிழ்நாட்டில் உடனடியாக அமலுக்கு வரும் என தமிழக அரசு 7-ந் தேதி அறிவித்தது.

    இச்சட்டத்தை அமல்படுத்த ஐந்து பேர் கொண்ட குழுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறை கூடுதல் செயலர் தலைமையில் இந்த குழு இயங்கும். குடும்பநலத்துறை இயக்குநர் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பெண்கள் அமைப்பை சேர்ந்த வசுதா ராஜசேகர், சட்டத்துறை உதவி செயலர், மகப்பேறு பேராசிரியர் மோகனா உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர்.

    ஏற்கனவே 2005-ம் ஆண்டு ஐ.சி.எம்.ஆர். வகுத்த வழிகாட்டுதல்கள் மட்டுமே அமலில் இருந்தன.

    அதன்படி ஒரு கருத்தரிப்பு மையம் மாநில அதிகாரிகளிடம் பதிவு செய்திருக்க வேண்டும், லாப நோக்கில் ஈடுபடக்கூடாது, 18 முதல் 35 வயது பெண்களிடம் இருந்து மட்டுமே கரு முட்டைகள் எடுக்க முடியும்.

    தற்போது அமலுக்கு வந்திருக்கும் சட்டத்தின்படி, 23 முதல் 35 வயதுக்குள்ளான பெண்ணிடம் மட்டுமே கருமுட்டைகள் எடுக்க முடியும்.

    வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அதுவும் ஏழு முட்டைகள் மட்டுமே கரு கொடுக்க முடியும்.

    சம்பந்தப்பட்ட மருத்துவர், முட்டை அளிக்கும் பெண் எந்த வகையிலும் தவறாக பயன்படுத்தக்கூடாது, எந்த மோசடியிலும் ஈடுபடக்கூடாது. மீறி ஈடுபட்டால், முதல்முறை குறைந்தபட்சம் ஐந்து லட்சமும் அதிகபட்சம் பத்து லட்சமும், மறுமுறை தவறு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் பத்து லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

    • சிறுமியிடம் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருமுட்டை எடுக்கப்பட்டது.
    • 3-வது முறையாக ஈரோட்டில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி அதிரடி விசாரணை நடத்தினார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதுதொடர்பாக ஏற்கனவே சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    ஈரோட்டில் சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய 2 ஆஸ்பத்திரிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். அந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், நிர்வாக இயக்குனர்கள் டாக்டர்கள் என 2 கட்டமாக போலீசார் விசாரணையை விரிவாக நடத்தி முடித்துள்ளனர்.

    மேலும் சென்னையில் இருந்து வந்த மருத்துவக்குழு பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆஸ்ப த்திரிக்கு நேரடியாக சென்று அதிரடி விசாரணையை மேற்கொண்டது.

    சிறுமியிடம் கருமுட்டை எடுத்த ஈரோட்டில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரி, சேலம், ஓசூரில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். மேலும் இது தவிர திருவனந்தபுரம், திருப்பதியிலும் 2 தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும், ஆந்திர மாநிலம் திருப்பதியிலும் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் கருமுட்டை எடுக்க சிறுமியை அழைத்து சென்றது யார்? என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

    சிறுமியிடம் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருமுட்டை எடுக்கப்பட்டது. இதனால் அடிக்கடி அந்த சிறுமி அந்த ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றுள்ளார். அப்போது பெருந்துறை மருத்துவமனைக்கு நெருங்கிய தொடர்பில் இருக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கருமுட்டை தேவைப்பட்டது.

    இதுகுறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் பெருந்துறை மருத்துவமனையிடம் கேட்டு உள்ளது. இதையடுத்து பெருந்துறை மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாட்டில் இந்த சிறுமியை அங்கு அழைத்து சென்று உள்ளனர்.

    முன்னதாக அந்த சிறுமிக்கு பெருந்துறை மருத்துவமனையிலேயே அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு கருமுட்டை எடுக்க தயாரான நிலையில் அவரை திருவனந்தபுரம் மருத்துமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு சிறுமியை அனுமதித்து மயக்க ஊசி செலுத்தி கருமுட்டை எடுக்கப்பட்டது.

    இதேபோல் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை மூலம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டு கருமுட்டை எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த 2 ஆஸ்பத்திரிகள் மூலம் எத்தனை முறை சிறுமி அழைத்து செல்லப்பட்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் 3-வது முறையாக ஈரோட்டில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி அதிரடி விசாரணை நடத்தினார்.

    நேற்று மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 4 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்றது. ஏற்கனவே இந்த 2 ஆஸ்பத்திரிகள் அளித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் நேற்று 3-வது முறையாக விசாரணை நடைபெற்றது.

    இந்நிலையில் சேலம், ஓசூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்த விவகாரம் தொடர்பாக இன்று அல்லது நாளை நேரில் வந்து ஆஜராக ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    அதில் சிறுமிக்கு எந்தெந்த நாட்களில் கரு முட்டை எடுக்கப்பட்டது. எந்த ஆவணங்கள் அடிப்படையில் கருமுட்டை எடுக்கப்பட்டது.

    அந்த ஆவணங்களில் கையொப்பம் இட்டது யார்? கடந்த 4 ஆண்டுகளில் ஆஸ்பத்திரிகளில் எத்தனை பேருக்கு கருமுட்டை எடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் குறித்து கேட்டு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    ஆனால் ஆஸ்பத்திரி தரப்பில் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளனர். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் இந்த 2 ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர், டாக்டர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடைபெறும் என தெரியவந்துள்ளது.

    இதன் மூலம் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாக வாய்ப்புள்ளது. இதனால் இந்த விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

    • ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவ உயர்மட்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.
    • ஆந்திரா, கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுமி கருமுட்டை எடுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவ உயர்மட்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை போல வேறு ஏதேனும் சிறுமிகளிடம் இதுபோன்று கரு முட்டை எடுத்து விற்கப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மற்றும் பெருந்துறை தனியார் மருத்துவமனை கருத்தரிப்பு மைய நிர்வாகிகளிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அந்த 2 தனியார் மருத்துவமனைகளில் இதுவரை கருமுட்டை வழங்கியவர்களின் பட்டியலை, ஆதார் எண் மற்றும் முகவரியுடன் சமர்பிக்குமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    போலி ஆதார் மூலம் வேறு ஏதேனும் சிறுமிகளிடம் இதுபோன்று சட்டவிரோதமாக கருமுட்டை பெறப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக இதுவரை கருமுட்டை வழங்கியவர்களின் பட்டியலை உடனே வழங்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    அந்த பட்டியலில் உள்ள ஆதார் உண்மையானதா? என்பதை ஆய்வு செய்தால் வேறு ஏதேனும் சிறுமிகள் இதே போன்று கருமுட்டை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டனரா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் ஆந்திரா மற்றும் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுமி கருமுட்டை எடுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    • சென்னை மருத்துவ குழு சிறுமியிடம் இன்று விசாரணை நடத்தியது.
    • விசாரணையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது தவறு இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது மகளுடன் வசித்து வந்த தாய் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அப்போது அந்த பெண்ணிற்கும் பெயிண்டர் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்து வந்தார். பெயிண்டரும், அந்தப் பெண்ணும் ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களில் கருமுட்டை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர்.

    அப்போது கருமுட்டையை கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்யும் புரோக்கர் மாலதி என்பவரிடம் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது புரோக்கர் மாலதி உங்கள் மகளின் கருமுட்டையையும் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

    இந்நிலையில் அந்த பெயிண்டர் சிறுமியை பலாத்காரம் செய்து தொந்தரவு கொடுத்துள்ளனர். பின்னர் பெயிண்டரும், சிறுமியின் தாயும் இணைந்து சிறுமியின் கருமுட்டையை 8 முறை விற்பனை செய்துள்ளனர்.

    இதன் மூலம் கிடைத்த பணத்தில் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இதற்காக சிறுமியின் பெயர், பிறந்த தேதி, ஆதார் அட்டையை போலியாக தயாரித்து ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கருமுட்டையை விற்பனை செய்துள்ளனர். இதற்கு ஈரோடு பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஜான் என்பவர் உதவி செய்துள்ளார்.

    இதனையடுத்து சிறுமி அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். பின்னர் உறவினர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு ஈரோடு சூரம்பட்டி போலீசில் நடந்த விஷயம் குறித்து புகார் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் தாய், பெயிண்டர், புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோரை போக்சோ உள்பட 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இது தொடர்பாக ஈரோடு கூடுதல் டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கருமுட்டை விவகாரம், போலி ஆதார் அட்டை தயாரித்தது தொடர்பாக ஈரோடு, பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இதன் அடிப்படையில் நேற்று மாலை 2 மருத்துவமனையின் நிர்வாகிகள் 3.30 மணி அளவில் ஏ.டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்தனர். மருத்துவ நிர்வாகிகளிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி விசாரணை நடத்தினார்.

    சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. விசாரணையில் என்னென்ன கேள்வி கேட்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனரகத்தில் இருந்து மருத்துவ அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு அவர்கள் விசாரணைக்காக ஈரோடுக்கு வந்துள்ளனர்.

    இந்த மருத்துவ குழு இன்று காலை அரசு காப்பகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமி இடம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    அந்த குழு சிறுமியிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் விரிவாக கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு மருத்துவ குழு விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

    இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த குழு தங்கியிருந்து அனைத்து மருத்துவமனைகளிலும் விசாரணையை மேற்கொண்டு அதன் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.

    இதனடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விசாரணையின் அடி ப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தவறு செய்தது கண்டு பிடிக்கப்பட்டால் அதன் உரிமம் ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் இந்த விவகாரம் தற்போது மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    ×